Panchatantra Stories in Tamil /பஞ்சதந்திர கதைகள்
வீண் உபதேசம்

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன.
குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை.
கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று.
நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.
அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று.
மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன.
பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.
ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்
பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன.
மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது,
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று.
உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.
பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது.
இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன.
( தீய குணம் படைத்தவர்களுக்கு உபதேசம் செய்வதே வீண் வேலை )
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
புலித் தோல்
ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.
இந்தக் காரணத்தால் கழுதை நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வந்தது. சலவைத் தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும் கவலைப்பட்டான்.
ஒருநாள் சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்து வந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக் கிடிப்பதைக் கண்டான்.
அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒரு யோசனை தேன்றியது.
இந்தப் புலியின் தோலை உரித்து அதைக் கழுதை மீது போத்தி நெல் வயல்களில் விட்டு மேயச் செய்தால் உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப் பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள் பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும் என்று சலவைத் தொழிலாளி நினைத்து கொண்டான்.
புலித் தோலை உரித்து எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான்.
மறுநாள் கழுதை மீது புலித் தோலைப் போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச் செய்தான்.
புலிதான் பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டு குடியானவர்கள் அதை விரட்டப் பயந்து கொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.
கழுதை விளை நிலத்தில் அன்றாடம் வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.
ஒரு நாள் கழுதை புலித் தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு பெண் கழுதை உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கியது.
அதைக்கேட்ட புலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண் கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்து தானும் உரத்த குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டது.
குடியானவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளை எடுத்துக் கொண்டு வந்து கழுதையை நன்றாக அடித்துக் கொன்று விட்டார்கள்.
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
முத்துமாலை
ஓரிடத்தில் விசாலமான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தின் ஒரு காகமும் அதன் பெட்டையும் கூடு கட்டி வாழ்க்கை நடத்தி வந்தன.
அந்த ஆலமரத்தின் அடிமரப் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது.
பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும்.
ஆண் காகமும், பெண் காகமும் இரைதேடச் செல்லும் சமயமாகப் பார்த்து பொந்தில் இருக்கும் கருநாகம் மரத்தின் மீது ஏறி காகக் குஞ்சுகளைத் தின்றுவிட்டு இறங்கி விடும்.
திரும்பி வந்து பார்க்கும் போது குஞ்சுகள் காணாமல் போய் விட்டது கண்டு காகங்கள் மிகவும் மன வேதனை அடையும்.
ஒன்றிரு தடவைகள் என்று இல்லாமல் ஒவ்வொரு தடவையும் பெண் காகம் குஞ்சு பொரிப்பதும், அவற்றை கருநாகம் உண்பதும் வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.
குஞ்சுகள் காணாமல் போவதற்கு மரத்தடிப் பொந்தில் வாழும் கருநாகந்தான் காரணம் என்பதைக் காகங்கள் கண்டு கொண்டன.
ஆனால் காகங்களால் கருநாகத்தை என்ன செய்ய முடியும்? தலைவிதியே எனச் சில காலத்தை ஓட்டின.
திரும்பத் திரும்ப தன் குஞ்சுகளை இழக்கும் அவலத்தைப் பெண் காகத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
ஒருநாள் அது தன் கணவனை நோக்கி, நாதா “நமது குஞ்சுகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் கருநாகம் தின்று விடுகின்றதே! இனியும் இந்தத் துக்கத்தையும் மனவேதனையையும் என்னால் சகித்தக் கொள்ள முடியவில்லை. சனியன் பிடித்த இந்த மரத்தை விட்டு விட்டு வேறு ஒரு பாதுகாப்பு நிறைந்த மரத்திற்குக் குடி போய் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம்” என்று கண்ணீர் உகுந்து மனம் கசிந்துருகிக் கூறிற்று.
பெண் காகம் கூறியதைக் கேட்டு மன வேதனையுற்ற ஆண் காகம் தன் மனைவியை நோக்கி “அன்பே, உன் மனக்குமறல் எனக்கு விளங்காமலா இருக்கிறது! தொடர்ந்து நிகழும் இந்த அவலம் காரணமாக நான் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. என்றாலும் சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல என் மனம் ஒப்பவில்லை. ஆனால் அதற்காகக் கரும்பாம்பின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஏதாவது ஒரு உபாயம் செய்து இந்த பாம்பைக் கொன்றாக வேண்டும்” என்று ஆண் காகம் கூறிற்று.
“கொடிய விஷ ஜந்துவான் இந்தக் கருநாகத்தை நம்மால் கொல்ல முடியுமா?” என்று சந்தேகத்தோடு பெண்காகம் கேட்டது.
“கருநாகத்தைக் கொல்லும் அளவுக்கு வலிமையோ வல்லமையோ எனக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் யோசனை கலந்து இந்தக் கருநாகத்தை நிச்சயமாக என்னால் ஒழித்துக் கட்ட முடியும்” என்று ஆவேசத்துடன் கூறியது ஆண் காகம்.
பிறகு தன் மனைவியைப் பார்த்து, “அன்பே, பாம்பைக் கொல்ல உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டாக வேண்டும். நீ பத்திரமாக இரு. நான் நண்பன் ஒருவனைச் சென்று பார்த்துவிட்டு விரைவில் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டது.
கொஞ்ச தொலைவில் வசித்து வந்த ஒரு நரி காகத்தின் நெருக்கமான நண்பன். நல்ல அறிவாற்றலும் தந்திர சுபாவமும் படைத்த அந்த நரியைத் தேடிக்கொண்டு காகம் அங்கு போய்ச் சேர்ந்தது.
நரி தன் நண்பன் காகத்தை மகிழ்சியுடன் வரவேற்றது.
“நண்பனே, ஏன் முகவாட்டத்துடன் இருக்கிறாய். உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது?” என்று நரி பரிவுடன் கேட்டது.
காகம், தான் வாழும் மரத்தடியில். பொந்தில் வசிக்கும் கருநாகம் செய்யும் அட்டூழியத்தை மன வேதனையுடன் எடுத்துக் கூறி, எங்கள் குஞ்சுகளைத் தின்று வாழும் கருநாகத்தை அழிக்க நீதான் ஏதாவது ஒரு உபாயம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
நரி தன் நண்பனுக்குப் பலவாறாக ஆறுதல் கூறி, “நண்பனே, கவலைப்படாதே! அடாது செய்யும் அக்கிரமக் காரனக்கு தானாகவே அழிவு வந்து சேரும். பேராசையில் மீன்களைக் கொன்று தின்று அட்டூழியம் புரிந்த கொக்கிற்கு அதன் பேராசையே எமனாக வந்தது போல கருநாகம் தானே தன் அழிவினைத் தேடிக்கொள்ளும் காலம் நெருங்கி விட்டது” என்று செப்பியது.
“நண்பனே, கருநாகத்தைக் கொல்வதற்கு ஓர் உபாயம் சொல்லி உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
நரியும் நல்ல உபாயம் ஒன்றைக் காகத்திற்குக் கூறி, நண்பனே, இந்த யோசனையைச் செயற்படுத்து, கருநாகத்தின் ஆயுள் முடிந்துவிடும் என்று சொல்லியது.
காகம் நண்பன் நரியிடம் விடைபெற்றுக் கொண்டு அக்கணமே அதன் யோசனையைச் செயற்படுத்தும் முயற்சியினைத் தொடங்கியது.
அந்த நாட்டின் அரசி வழக்கமாக நீராடும் குளக்கரைக்குச் சென்று காகம் ஒரு மரத்தில் மறைவாக அமர்ந்து அரசியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அரசி தனது தோழிகளுடன் குளத்திற்கு வந்து சேர்ந்தாள்.
தன்னுடைய விலை உயர்ந்த ஆபரணங்களையெல்லாம் கழற்றிக் கூரைமீது வைத்துவிட்டு அரசி நீராடுவதற்காக குளத்தில் இறங்கினாள்.
காகம் உடனே பறந்து வந்து மிகவும் மதிப்புமிக்க முத்துமாலை ஒன்றைத் தனது அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்தோடியது.
அந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசியும் தோழிகளும் கூக்குரலிட்டனர்.
உடனே சில தோழிகள் சென்று காவலர்களிடம் நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்கள்.
காவலர்கள் பறந்து செல்லும் காகத்தைத் துரத்திக் கொண்டு கூச்சலிட்டவாறு பின் தொடர்ந்து சென்றார்கள்.
காகம் பறந்தவாறு நேராகத் தான் குடியிருக்கும் ஆலமரத்திற்குச் சென்றது.
அதற்குள் காவலர்கள் அந்த அரத்தருகே வந்து சேர்ந்தார்கள்.
காகம் தனது அலகில் கொத்திப் பிடித்திருந்த அரசியின் அணிகலனை காவலர்கள் கண் பார்வையில் படும் விதமாக கருநாகத்தின் பொந்துக்குள் போட்டு விட்டது.
காவலர்கள் கரும் பாம்புப் புற்றை இடித்து நகையைத் தேடினார்கள்.
புற்றுக்குள் இருந்த கருநாகம் சீறிக்கொண்டு வெளியே வந்தது.
காவலர்கள் அந்தக் கருநாகத்தைக் தடியால் அடித்துக் கொன்றனர்.
பிறகு புற்றை நன்றாக இடித்துப் பெயர்த்து அரசியின் அணிகலனைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
அதன் பிறகு அந்தக் காகக் குடும்பம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்த தொடங்கியது.
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
தலைவன்
அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.
இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது’ என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.
அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.
(எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.)
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
என்ன கவலை?
காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.
“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?” என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.
அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், “என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்டது.
“இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்” என்றது யானை.
யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.
அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.
(கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.)
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
பெரிய குளம்
ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.
வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.
அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.
ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.
மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.
அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, “ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்” என விசாரித்தது.
கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, “நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே” என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.
“கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்” என்று நண்டு திகிலுடன் கேட்டது.
இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.
இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.
கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.
அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.
கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.
“என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்” என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.
கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.
மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.
கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.
ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.
கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.
கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, “நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்” என்று கேட்டது.
நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, “அதுதான் குளம்” என்று ஏளனமாகக் கூறிற்று.
மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.
மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.
நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.
நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.
(கெடுவான் கேடு நினைப்பான்.)
Coming Soon – Panchatantra Stories in Tamil PDF Download. Comment below.
Read Tenali Raman Stories Here.